எது பிரம்ம ஞானம்? ஏன் பிரம்ம ஞானம்?
எல்லாம் வல்ல, யாவும் அறிந்த, எங்கும் நிறைந்த வெளியே (Space ) மெய்ப்பொருள்.
அதுவே பிரம்மம் (தெய்வம்).
பிரம்மமே தன்னிறுக்க சூழ்ந்தழுத்தும் ஆற்றலால் எழுச்சி பெற்று, விண் முதல் மண் வரை ஐம்பூதங்களாகி அண்டங்களாகி, ஓரறிவு தாவரம் முதல் ஆறறிவு மனிதன் வரை இயற்கையாக உள்ளதை தெளிவாக அறிந்த அறிவே பிரம்ம ஞானம்.
பிரம்மஞானிக்கு, நான் இயற்கையின் பகுதி என்பதும்,
இயற்கையின் உச்சகட்ட நிகழ்ச்சியே மனித வாழ்க்கை என்பதும் விளங்கி விடும்.இயற்கை வளங்களை வாழ்க்கை அனுபோகப் பொருட்களாக உருமாற்றி, தரம் மாற்றி, அழகுப்படுத்தி இயற்கை எழில்களை இரசித்து இன்புறுவதே மனிதவாழ்வின் நோக்கம் என்பதை விளங்கிக் கொண்டு வாழ்பவரே, வாழ்வாங்கு வாழ்ந்து மனநிறைவு பெற்று இறைநிலையை அடைவார்.
நான் பிரம்மம் என்பதை தெளிவாக அறிந்த பிரம்மஞானிக்கே, அனைத்துயிரும் ஒன்றென்று அறிந்த அன்பு(சம உணர்வு)மலரும்.தான் தனது என்ற தன்முனைப்பும் (ஆணவம்), தனக்கும் பிறருக்கும் தீங்கு தரும் பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் ஆகிய ஆறு தீயகுணங்களும், தனக்கும் பிறருக்கும் நன்மை தரும் நிறைமனம், பொறுமை, ஈகை, கற்பு, சம உணர்வு, மன்னிப்பு ஆகிய ஆறு நற்குணங்களாக மாற்றம் பெறும். மனம் தூய்மை அடைந்து விடும்.
அகத்தாய்வுப் பயிற்சியில் கற்பிக்கப்பட்ட உடல் நலம் காக்கும் அறிவும், பொருள் வளம் காக்கும் அறிவும், நட்பு நலம் காக்கும் அறிவும் *உள்ளுணர்வாக
(by Intuition )விளங்கிவிடும்.*
ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய அறநெறிகளைக் கடைப்பிடித்து இன்புற்று வாழ்வது இயல்பாகி விடும்.
"அறத்தான் வருவதே இன்பம்" என்கிறார் திருவள்ளுவர்.
உடல் நலம் காக்க,
உடற்பயிற்சியோடு காயகல்பப் பயிற்சியும், அகத்தவங்களும் செய்து,முடிந்தவரை உணவு, உழைப்பு, உறக்கம், பாலுறவு, எண்ணம் ஆகிய ஐந்தில் அளவு முறை காத்தும், பிறர் துன்பம் போக்கும் புண்ணியம் செய்தும் உடல் நலத்தோடு வாழலாம்.
பொருள் வளம் காக்க, ஆக்கத்துறையில் அறிவைச் செலுத்தி ஊக்கமுடன் உழைத்துப் பொருளீட்டி, ஏழைகளுக்கு உதவி,ஆடம்பர வீண் செலவுகளைத் தவிர்த்து நிறை செல்வந்தராக வாழலாம்.
நட்பு நலம் காக்க, எல்லோரையும் அன்போடு வாழ்த்தி, இன்முகத்தோடு இன்சொல் பேசிப் பழகி,யாருக்கும் துன்பம் தராமலும் துன்பப்படுவோருக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து உயர் புகழோடு வாழலாம்.
உலக இன்பங்களைத் துய்க்கும் நான் உடல் அல்ல.நான் ஆன்மா(மெய்ப்பொருள்); நான் நிலையானவன்.உலக இன்பங்களைத் துய்க்கும் அனைவரின் மனமும் நானே என்பதை அறிந்து, எதற்கும் பேராசைப் படாமலும், மரணபயம் இல்லாமலும் நிகழ்கால இன்பங்களைத் துய்த்து பேரின்ப வாழ்க்கையை வாழ்பவரே, பொருள், புகழ், செல்வாக்கு, புலனின்பம் நான்கும் போதும் என்ற *மனநிறைவும் அமைதியும்(Satisfaction and peace) அடைவார்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவரே வானுறையும் தெய்வநிலையை(பிறவாத நிலையை) அடைவார்.
"தெய்வநிலை அறியாமல் திகைக்கும் மக்கட்கெல்லாம் தெளிவாக இறையுணர பிரம்மஞானம் தந்தேன்" என்கிறார் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வேதாத்திரியம் வாழ்க வளமுடன்
தொகுத்தவர்: முதுநிலை ஞானாசிரியர் அருள்நிதி. வேதசுப்பையா.
அலைபேசி எண்:
7010955300
Comments
Post a Comment