துரியாதீத தவம் எவ்வாறு மலர்ந்தது ? - அருட்தந்தை.
தவத்தில் முழுமையான தவம் துரியாதீத தவம். ஆனால் துரியாதீத தவம் செய்முறை யாரும் நேரடியாக சொல்லவே இல்லை. நூல்களிலும் விளக்கமில்லை.
ஆனால் ஒரே ஒரு பெரியவர் எனக்கு துரியம் வரை கற்று கொடுத்தார். ஆனால் எனக்கு நீண்ட நாட்களாக நிறைவே இல்லாமல் இருந்தது. அப்புறம் ஒரு சமயம் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் ஒரு பாடலை நான் படித்தேன்.
"நன்றாய் ஞானம் கடந்து போய்
நல்இந்திரியம் எல்லாம் ஈர்த்து
ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ்
உலப்பில் அதனை உணர்ந்து உணர்ந்து சென்று ஆங்கு
இன்ப துன்பங்கள் செற்றுக் களைந்து பசையற்றால்
அன்றே அப்போதே வீடு
அதுவே வீடு வீடாமே" ~....
அப்பாடலைப் படித்து, நானாகப் பழகி பழகி அந்த துரியாதீத நிலையை உணர்ந்தேன். பழகி அதனால் கண்ட அனுபவமும், பெற்ற மகிழ்ச்சியும், மன நிறைவும்தான் மற்றவர்களுக்கு நேரடியாக சொல்லி கொடுக்கிறேன்.
ஒரு தத்துவமோ, விஞ்ஞானமோ யார் மூலமாக வெளிவந்தாலும் அது இறைவனுடைய அருள். நான் உணர இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டது போல் உங்களுக்கு காலம் தேவையில்லை. நேரடியாக இருந்து நான் உணர்த்திய பிறகு, உங்களுக்கு அதிக சிரமமும் காலமும் தேவையில்லை.
ஆனால் மற்றவற்றைப் போல் இதனையும் எளிதாக நினைத்து விட்டால், அத்துரியாதீதம் ஆழமாக மனதில் வராது. பழகிப் பழகி, சிந்தித்து சிந்தித்து, நமதாக்கிக் கொள்ள வேண்டும்.
துரியாதீத தவத்தில் முதலில் ஆக்கினை, பின் துரியம், மூன்றாவது சக்திகள தவம், இறுதியாக நான்காவது சிவகள தவம். சிவகள தவத்தில்தான் தூய்மையான இறை வெளியோடு அறிவு ஒன்றி கலந்து நின்று நிலைபெறும். முறையாக பயின்று தவத்தை செய்து பயன்பெறுங்கள்.
- அருட்தந்தை
Comments
Post a Comment