வேதாத்திரிய சிந்தனைகள் :
''அறிஞர்களின் நிர்வாகம்"
ஒழுக்கம் அறம் தவம் மூன்றும் உலகோர் வாழ்வில்
ஓங்க, அறிவும் செயலும் தூய்மை கொள்ளும்.
பழக்கம் இயல்பாய் அமையக் கல்வி, செல்வம்,
பண்புடையோர் நிர்வாகம் பரவ வேண்டும்.
- வேதாத்திரி மகரிஷி
மக்களிடம் சிறந்த நற்பண்புகள் அமைய வேண்டும் என்றால்
மக்களை வழிநடத்தக்கூடிய அரசியலமைப்புகள் மக்களின்
மீது உண்மையான பற்றுடைய, அவர்களின் மீது அக்கறை
உடையவைகளாக இருக்கவேண்டும். அத்தகைய
பண்புடைய நிர்வாகம் அமைந்து மக்களை வழி நடத்தினால்
மக்களிடம் ஒழுக்கம், கடமை, ஈகை எனும் அறநெறியோடு
கல்வி, செல்வம், தவம் இவை சிறந்து விளங்கும்.
அவர்களிடம் செயல் தூய்மையும், அறிவில் தெளிவும்
உண்டாகும்.
=============================
' உயிரின் சிறப்பு '
-------------------------
உயிர் எனும் சக்தி உணர்ச்சியில் மனமாய்,
ஒடுங்கி தன் மூலம் உணர்ந்திடப் பரமாம்.
உயிர்-பரம்-அறிவு ஒன்றே பொருளால்
உணர்வு ஒழிவு நிலைகளில் மாறுதல்.
- வேதாத்திரி மகரிஷி
உயிரின் வெளிப்பாடாகிய சீவகாந்தம் புலன்கள்
வயப்பட்டு செயல்படும்போது மனமாக இயங்குகிறது.
அதே மனம் தனது மூலமாகிய உயிரைப் பற்றி அறிந்து,
அதன் மூலமாகிய இறைநிலையை உணரும்போது
அதுவே தானாக இருப்பதை அறிந்துகொள்கிறது.
உயிர்-பரம்-அறிவு வேறு வேறு அல்ல என்பதை
அறிந்துகொள்ளும்போது இவை அனைத்துமே
பரம்பொருள் என்று தெளிவு உண்டாகிறது. தோற்ற
நிலைகளில் மட்டுமே அவை வேறு வேறாக காட்சி
அளிக்கின்றன. ஆனால் தோற்றங்களைக் கடந்து
மூலத்தை நோக்கும் பொது அனைத்துமே பரம்பொருள்
எனும் உண்மை உணரப் படுகிறது.
=========================
" ஒழுக்கக் கல்வி ! "
-----------------------------
எழுத்தறிவு தொழிலறிவு
இயற்கைத் தத்துவ அறிவு
ஒழுக்க பழக்கங்கள் இவை
உணர்த்தும் முறையே கல்வி.
இழுக்கின்றி இலவசமாய்க் கல்விதனை
எங்கெங்கும் பிறக்கின்ற
உலகக் குழந்தைகட்கு
ஊட்டும் முறை முதல் தேவை.
- வேதாத்திரி மகரிஷி
இன்று உலகில் கல்வி என்பது இலாபத்தை ஈட்டக்கூடிய
ஒரு தொழிலாகவே மாறிவிட்டது. இத்தகைய கல்வி
நிலையங்களில் மாணவர்களுக்கு அளிக்கப்படும் கல்வி
வாழ்வியல் விழுமியங்களை சொல்லிக் கொடுப்பதற்கு
பதிலாக, பொருளாதாரத்தையும், அறிவையும் பெருக்க
மட்டுமே பயன் படுகிறது. கல்விக் கூடங்களில் பயிலும்
மாணவர்கள், சமுதாயத்துக்கு மதிப்பளிக்கக் கூடியவர்களாகவும்,
சமுதாய உயர்வுக்கும், நன்மைக்கும் பாடுபடுபவர்களாகவும்
பிறருக்கு துன்பம் இழைக்காமல் வாழக் கூடியவர்களாகவும்
வளரவேண்டும். எதிர்கால சமுதாய முன்னேற்றத்திற்கு
இத்தகைய கல்விமுறையே வேண்டும். எழுத்தறிவு,
தொழிலறிவு இவற்றோடு இயற்கைத் தத்துவ அறிவு
மற்றும் ஒழுக்க பழக்கங்கள் இவையிணைந்த கல்வி
உலகில் உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும், இலவசமாக
வழங்கப்பட வேண்டும். இதுவே சிறந்த கல்விமுறை ஆகும்.
~ வள்ளல் இராமமூர்த்தி
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
Comments
Post a Comment